விழுப்புரம் அருகே அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்தவர் புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார்.
அரசியல் மாற்றம் என்பது காலங்களுக்கு ஏற்ப அடிக்கடி மாறுபட்டுக் கொண்டே இருக்கும். காமராஜர் வரை காங்கிரஸ் ஆட்சி, காமராஜருக்குப் பின் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி, அதற்குப் பின், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி பின் இரண்டு கட்சிகள் மாறி மாறி தமிழகத்தை ஆட்சி செய்து வந்தன. தற்போது இந்த இரண்டு திராவிட கட்சிகளுக்கும் அடுத்த நிலையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமான் தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி பல வருடங்களாக கட்சி நடத்தி வருகிறார்.
நடிகர் கமலஹாசன் ஓரிரு வருடங்களுக்கு முன்பாக மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்த நிலையில், முதல் தேர்தலிலேயே கணிசமான வாக்குகளை அந்த கட்சி பெற்றது. அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கட்சி ஆரம்பிப்பதற்கான அத்தனை வேலைகளையும் சரியாக செய்துவிட்டு, சரியான நேரத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறார். இப்படி பலரும் அரசியலில் இறங்கி வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் சினிமா பிரபலங்களாகவும் அல்லது இதற்கு முன்பாக பிற கட்சிகள், அமைப்புகளிலிருந்த அனுபவத்தை வைத்து கட்சி தொடங்கியவர்களாக இருக்கிறார்கள்.
இது அத்தனைக்கும் புதுமையாக அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வருவதற்காக தனது வேலையை விட்டுவிட்டு அரசியலில் இறங்கியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் தாராபுரம் அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் சபரிமாலா. இவர் நீட் தேர்வை எதிர்த்தும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், கடந்த 2017 ஆம் ஆண்டு போராட்டத்தில் இறங்கியுள்ளார். இவர் அரசு வேலையை சார்ந்தவர் என்பதால் அரசுக்கு எதிராக எந்த போர்க்கொடியும் தூக்க கூடாது என்ற நிலை இருந்ததன் காரணமாக, தனது வேலையை ராஜினாமா செய்தவர். தற்போது இவர் புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார்.
பெண் விடுதலை என்ற பெயரில் கட்சி ஆரம்பித்த இவரது அரசியல் பயணத்திற்கு பெரும்பாலானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நல்ல சம்பளத்தில் அரசுப் பள்ளி ஆசிரியராக நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த இவர் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பணிபுரிந்த வேலையை விட்டுவிட்டு அரசியலில் இறங்கி உள்ளார் என்பது வியக்கத்தக்க மாற்றத்தில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.