குழந்தை பிறந்து ஐந்து நாட்களேயான நிலையில் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய பொன்னேரி மாரியம்மன் கோவில் தெருவில் அரவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி காவியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் காவியாவை பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு காவியாவிற்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதன்பின் அவரையும், குழந்தையும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தனர். இதனையடுத்து இளம்பெண் காவியா தனது குழந்தைக்கு பால் கொடுக்க முடியாமல் வலியால் அவதிப்பட்டு வந்திருக்கிறார்.
பின்னர் தனது குழந்தைக்கு பால் கொடுக்க முடியாததால் மன வேதனையில் இருந்து வந்த காவியா தனது கணவரிடம் குழந்தையை பார்த்துக் கொள்ளுங்கள் நான் கழிப்பிடம் சென்று வருகிறேன் என கூறி விட்டு வெளியில் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாத காரணத்தால் குடும்பத்தினர் காவியாவை தேடி சென்றுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் காவியா கிடைக்கவில்லை. அதற்கு பிறகு வீட்டில் அருகில் இருக்கும் ஒருவரின் விவசாய கிணற்றில் காவியாவின் துண்டு கிடந்ததை பார்த்த குடும்பத்தினர் உள்ளே இறங்கி காவியாவை தேடியதில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதுபற்றி காவல்துறையினருக்கு காவியாவின் குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காவியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காவியாவின் தாயார் சௌந்தரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காவியாவிற்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் இது தொடர்பாக விசாரணை நடத்த இருக்கிறார்.