தந்தையை தாக்கிய காவல்துறையினரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளம்பெண் குடிநீர் தொட்டியின் மீது அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியரை தாட்கோ நகரில் மாற்றுத்திறனாளியான பிரான்சிஸ் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 18 – ஆம் தேதியன்று தனது வீட்டில் இருக்கும் ரேஷன் அரிசியை சித்தப்பா வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார். அப்போது புளியரை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக சென்ற பிரான்ஸ் அந்தோணியை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் அவரிடமிருந்த ரேஷன் அரிசி பறிமுதல் செய்ததோடு, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனைப் பார்த்த அவருடைய உறவினர்கள் அந்தோணியை காவல் நிலையத்திலிருந்து அழைத்து சென்று செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்தோணியின் 2 – வது மகளான அபிதா என்பவர் செங்கோட்டை அரசு மருத்துவமனையின் எதிர்ப்புறம் இருக்கும் செல்போன் டவர் மீது ஏறி ஆர்ப்பாட்டம் செய்ததோடு, தற்கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அபிதாவிடம் 5 மணி நேரம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அவரின் தற்கொலை முயற்சியை கைவிட செய்துள்ளனர்.
தற்போது அந்தோணியின் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளனர். அப்போது தீடீரென அபிதா குடி நீர்த் தொட்டியின் மீது ஏறி போராட்டம் நடத்தியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அபிதாவிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் அபிதா தனது தந்தையை தாக்கிய காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்ததை காண்பித்தால் தான் நான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனை அருகில் 50 – க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது குறித்து தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான கிருஷ்ணராஜ் என்பவர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதன் பிறகு புளியரை காவலரான முருகேசன், மஜீத் ரகுமான் ஆகியோரை காத்திருப்போர் பட்டியல் பகுதிக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.