மது குடித்துவிட்டு சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்திலுள்ள கண்ணாடியை உடைத்ததால் வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்திலிருந்து சென்னைக்கு அரசு பேருந்துகள் சென்ற நிலையில் கள்ளக்குறிச்சியில் இருக்கும் உளுந்தூர்பேட்டை பகுதியில் பேருந்து வந்து கொண்டிருக்கும்போது குடிபோதையில் இருந்த 30 வயதுடைய வாலிபர் ஒருவர் திடீரென ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். அதில் சிலர் அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்தும் அவர் அதை கேட்கவில்லை. இந்நிலையில் ஒரு கட்டத்தில் அவர் தனது எல்லையை மீறி அரசு பேருந்தின் முன்புறத்தில் இருந்த கண்ணாடியை அடித்து உடைத்துள்ளார்.
இதனால் ஓட்டுனர் காவல் நிலையத்திற்கு முன்பாக பேருந்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்று வாலிபர் பற்றி புகார் கொடுத்துள்ளார். அந்த வாலிபர் அதற்குள்ளேயே பேருந்திலிருந்து இறங்கி காவல் நிலையத்தின் முன்பாக அரை நிர்வாணத்துடன் தரையில் அமர்ந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். இது பற்றி தகவலறிந்த காவல்துறையினர் ரகளையில் ஈடுபட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தியுள்ளார். ஆனால் அந்த வாலிபர் அளவுக்கு அதிகமாக குடித்து இருந்ததால் அவரிடம் சரியான தகவல்களை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன்பின் போதை தெளிந்ததும் அந்த வாலிபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் அவர் தொழுதூர் அருகில் இருக்கும் கண்டனம் நத்தம் கிராமத்தில் வசிக்கும் அருண்குமார் என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து மது அருந்திவிட்டு சாலையில் சென்ற பேருந்தின் கண்ணாடியை உடைத்து தகராறில் ஈடுபட்டதால் வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.