திருவள்ளூரில் வீட்டருகே உள்ள கோவிலுக்கு சென்று வருவதற்குள் லாரி உரிமையாளர் வீட்டில் திருடர்கள் கைவரிசையை காட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் பகுதியை அடுத்த ஆத்திபேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவர் லாரி உரிமையாளர் ஆவார். இவரது மூத்த மகன் வெளிநாட்டில் பணிபுரிந்து வர, இளைய மகன் அருகில் உள்ள கனரா வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் இளையமகன் பணிக்கு செல்ல தனது மனைவியுடன் கஜேந்திரன் அருகில் உள்ள கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார்.
பின் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் தங்க நகை, ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூபாய் 15,000 பணம் உள்ளிட்டவை திருடு போய் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் கைரேகைகளை சேகரித்துக் கொண்டு பின் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.