ஜார்கண்ட் மாநிலத்துக்கு மொத்தமுள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகளில் 17 தொகுதிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) மூன்றாம் கட்டமாக தேர்தல் நடக்கிறது. 309 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.அவர்களில் 32 பேர் பெண்கள். 17 தொகுதிகளில் இரண்டு தொகுதிகள் பழங்குடியினர் மற்றும் பட்டியலின மக்களுக்கான தொகுதிகளாகும். தேர்தல் அமைதியாக நடைபெறும்பொருட்டு 40 ஆயிரம் பாதுகாப்பு படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
626 வாக்குப்பதிவு மையங்கள் ரகசிய கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) வாயிலாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர தேர்தல் நுண் கண்காணிப்பாளர்களும் (மைக்ரோ அப்சர்வர்) நியமிக்கப்பட்டுள்ளனர்.வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து வருவதாக ஜார்கண்ட் தலைமை தேர்தல் அலுவலர் விஜய் குமார் சோபே தெரிவித்தார். முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயந்த் சின்ஹா ஹசரிபார்க் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுபோத் காந்த் சாகே, ஜே.எம்.எம். கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகுவா மாஜி மற்றும் ராஞ்சி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சேத் ஆகியோரும் மூன்றாம் கட்டமாக நடைபெறும் தேர்தலில் வாக்குப்பதிவு செய்தனர்.
17 தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள் 56,18,267 ஆகும். இதில் 26,80,205 வாக்காளர்கள் பெண்கள். 86 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவார்கள். நக்ஸலைட்டுகள் பாதிப்பு மிகுந்த ஜார்கண்டில் ஐந்து கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு கட்ட தேர்தல் (நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 7) அமைதியான முறையில் நடந்த நிலையில், மூன்றாம் கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட தேர்தல் முறையே வருகிற 16ஆம் தேதி (15 தொகுதிகள்) மற்றும் 20ஆம் தேதிகளில் (16 தொகுதி) நடக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் வருகிற 23ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் மதியத்துக்குள் முடிவுகள் தெரியவரும்.