இருசக்கர வாகன விபத்தில் அரிசி வியாபாரி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை லட்சுமிபாளையத்தில் தங்கவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரிசி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் எஸ்.பி.பி. காலனிக்கு சென்ற தங்கவேல் மீண்டும் பள்ளிபாளையம் நோக்கி மொபட்டில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது டி.வி.எஸ். மேடு அருகே சென்றுகொண்டிருந்த போது வலதுபுறமாக மொபட்டை திருப்ப முயன்றபோது பின்னல் வந்த இருசக்கர வாகனம் தங்கவேல் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் பலத்தகாயம் அடைந்த தங்கவேலை அங்கிருந்தவர்கள் மீட்டு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக தங்கவேலை ஈரோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே துரதிஷ்டவசமாக தங்கவேல் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற பள்ளிபாளையம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தங்கவேல் மீது மோதிய சதிஷ்குமார் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.