திருப்பத்தூர் அடுத்துள்ள மிட்டூர் ஓமகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி திருமூர்த்தி. இவரது மகன் தினேஷ்.. வயது 14 ஆகிறது.. தினேஷ் மிட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்புக்கு தேர்ச்சியடைந்தார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பள்ளிகள் இன்னும் திறக்கவில்லை.. பள்ளிகள் திறந்து வழக்கம் போல செயல்பட சில காலங்கள் ஆகலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதனால், மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தனியார் பள்ளிகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்த ஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட்போன்கள் அனைத்து மாணவர்களுக்கும் அத்தியாவசிய தேவையாக மாறியுள்ளது. இந்தநிலையில், ஆன்ட்ராய்டு போன் இல்லாததால், மாணவன் தினேஷால் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியவில்லை.
மாணவர் தினேஷ் தன்னுடைய தந்தையிடம் ஆன்ட்ராய்டு போன் வாங்கித் தருமாறு தொடர்ந்து நச்சரித்துக்கொண்டே வந்துள்ளார்.. ஆனால் கூலித்தொழிலாளியான திருமூர்த்தியிடம் போன் வாங்கிக்கொடுக்கும் அளவுக்கு காசு இல்லாததால், அவரால் போன் வாங்கிக் கொடுக்க முடிவில்லை. இதனால், மிகுந்த மன வேதனையடைந்த தினேஷ் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்தபோலீசார், மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். படிக்காத தாய் மற்றும் தந்தையர், தங்களது பிள்ளைகளை நல்ல பள்ளிக்கூடத்தில் படிக்க வைத்து மகிழ்ச்சி அடைகின்றனர். மிகவும் கவலைக்கிடமான சூழலில் ஏழை மாணவர்கள் பள்ளியில் படித்து வருகின்றனர். பள்ளி கட்டணம் கட்டுவதற்கே சிரமப்படும் நேரத்தில், அனைவரின் வீட்டிலும் ஸ்மார்ட்போன் இருப்பது சாத்தியம் தானா?
ஸ்மார்ட்போன் இருந்தால் மட்டும் தான் பிள்ளைகள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று கவனிக்க முடியும் என்பது, மாணவர்களுக்கு ஒரு வித தாழ்வு மனப்பான்மையை வளர்க்கிறது. இதனால், மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கின்றனர் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.