தேனி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் விபத்தடைந்த இருவருக்கு மாவட்ட ஆட்சியர் உதவிய சம்பவம் அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது.
தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் முகாம்களை நேரில் சென்று பார்வையிடுவதற்காக வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது தேனி-போடி செல்லும் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் புறவழி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஓன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக வாகனத்தை நிறுத்தி இருசக்கர வாகனத்தில் வந்த இருவரையும் மீட்டு முதலுதவி அளித்துள்ளார். இதனை தொடர்ந்து அப்பகுதி வழியாக வந்த தோட்டக்கலை துணை இயக்குனர் பாண்டி அவர்களும் வாகனத்தை நிறுத்திவிட்டு விபத்து குறித்து விசாரித்துள்ளார். மேலும் ஆம்புலன்ஸ் வருவதற்கு கால தாமதம் ஆனதால் தோட்டக்கலை துணை இயக்குனர் அவரது வாகனத்திலேயே காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதற்கு பின்னர் கலெக்டரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனையடுத்து மனிதாபிமான அடிப்படையில் உதவிய மாவட்ட ஆட்சியருக்கும் தோட்டக்கலை துணை இயக்குனருக்கும் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விபத்து நடந்த அந்த சாலையில் அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதால், விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.