வெங்காய உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்த கடும் மழையால் வெங்காய உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் அன்றாட சமையலுக்குப் பயன்படுத்தும் வெங்காயத்தின் விலை அதிக அளவு உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், கடந்த 16ஆம் தேதி உணவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் 1 லட்சத்து 20 ஆயிரம் டன் வெங்காயத்தை உலகச் சந்தையில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அமைச்சரவை அனுமதி செய்ய முடிவெடுத்துள்ளதாக அறிவித்தார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார். இதன் முதல் கட்ட நடவடிக்கையாக தனியார் வியாபாரிகள் 1,000 டன் வெங்காயத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். இம்மாத இறுதியில் அவை இந்தியாவை வந்து சேரும் எனவும்; நுகர்வோர்துறை அமைச்சரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.