காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்புத் அந்தஸ்த்தை நீக்குவதற்கு முன்பு வன்முறைச் சம்பவங்கள் வெடிக்காமல் இருப்பதற்காக ஏராளமான துணை ராணுவ பாதுகாப்புப் படைகள் அங்கு குவிக்கப்பட்டன. அதில், மத்திய ஆயுத காவல் படை, எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, இந்தோ – திபெத்திய எல்லைக் காவல் படை உள்ளிட்ட 72 பாதுகாப்புப் படைகளும் அடக்கம்.
சட்டப்பிரிவு 370ஐ நீக்கிய பின்பும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்த பின்னும் கூட அங்கிருந்து துணை ராணுவ பாதுகாப்புப் படைகள் மத்திய அரசால் திரும்பப் பெறப்படாமலேயே இருந்தன. இருப்பினும், இந்த மாத தொடக்கத்தில் 20 பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த வீரர்களை அங்கிருந்து திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், 7000 பாதுகாப்புப் படை வீரர்களை காஷ்மீரிலிருந்து திரும்பப் பெற்றுக்கொள்வதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு படையிலிருந்தும் தலா 12 வீரர்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு படையிலிருந்தும் 100 வீரர்கள் குவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னமே கூறியது போல பாதுகாப்பு மறுஆய்வு செய்த பின்னர் இம்முடிவு எடுக்கப்பட்டதாக உள்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.