ஆப்கானிஸ்தான் படைக்கு ஆதரவாக அமெரிக்கா தொடர்ந்து வான்வழி தாக்குதலை நடத்தும் என்று அந்நாட்டு ராணுவத்தின் கமாண்டர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி வரும் நிலையில் தலிபான்களின் தாக்குதல் கடந்த சில நாட்களாக அந்நாட்டில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள பல்வேறு பகுதிகளை கைப்பற்றி வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க ராணுவத்தின் கமாண்டர்களில் ஒருவரான கென்னத் மெக்கன்சி ஆப்கானிஸ்தான் படைகளுக்கு உதவும் வகையில் அமெரிக்கா வான்வெளி தாக்குதலை தொடர்ந்து நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதேசமயம் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா முடித்துக்கொள்ள தீர்மானித்துள்ள நிலையில் அதன் பிறகும் வான்வெளி தாக்குதல் தொடருமா என்ற கேள்விக்கு அவர் சரிவர பதில் அளிக்கவில்லை. மேலும் அமெரிக்க ராணுவத்தின் கமாண்டர் அரசியல் ரீதியான தீர்வுகளுக்கு ஆப்கானிஸ்தானில் இன்னும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறியுள்ளார்.