மக்களுக்கு பக்கவிளைவை ஏற்படுத்தாத 100% பாதுகாப்பளிக்கும் ‘சினோபார்ம் சி.என்.பி.ஜி’ என்ற புதிய தடுப்பூசிக்கு அமீரக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சீனாவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உருமாறி தற்போது உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் கொரோனா தடுப்பூசிகள் உருமாறிய ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக குறைந்த செயல்திறனையே கொண்டிருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் அமீரகத்தில் ‘சினோபார்ம் சி.என்.பி.ஜி’ என்ற புதிதாக மேம்படுத்தப்பட்ட தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முதற்கட்ட பரிசோதனைகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. அதாவது இந்த தடுப்பூசி குறித்த ஆய்வில் ஏற்கனவே கொரோனோ தடுப்பூசி 2 தவணையும் செலுத்திக்கொண்ட தன்னார்வலர்கள் சிலர் பங்கேற்றுள்ளனர். அந்த ஆய்வின் முடிவில் செயலிழந்த நோய் எதிர்ப்புப்பொருளை கூட இந்த புதிய தடுப்பூசி மீண்டும் 100 சதவீதம் அதிகரிக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் மக்களுக்கு எந்த பக்கவிளைவும் இந்த தடுப்பூசியால் ஏற்படாது என்பதை ஆய்வாளர்கள் உறுதியாக கூறுகின்றனர். எனவே அமீரகத்தில் இந்த ‘சினோபார்ம் சி.என்.பி.ஜி’ தடுப்பூசி மிகவும் பாதுகாப்பான தடுப்பூசியாக அங்கீகாரம் அளிக்கப்பட்டு அவசரகால பயன்பாட்டிற்காக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மறுசீரமைப்பு செய்யப்பட்ட புரதம் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதால் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக இந்த புதிய தடுப்பூசி மருந்து திறம்பட செயல்படும்.
அதேபோல் ஆய்வில் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு உடலின் நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிப்பது தெரியவந்துள்ளது. எனவே அமீரகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாகவும், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் இந்த மருந்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.