மியான்மரில் 11 பேரை உயிருடன் எரித்து கொன்ற ராணுவத்தினர் மீது அமெரிக்கா கடுமையாக சாடியுள்ளது.
மியான்மரில் ராணுவத்தினர் வடமேற்கு பகுதியில் உள்ள கிராமம் ஒன்றுக்குள் நுழைந்து திடீரென 11 பேருடைய கால் மற்றும் கைகளை கட்டிப்போட்டு உயிருடன் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த ஆண்டு இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் நடந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற ஆங் சான் சூகீயின் ஆளுங்கட்சி ஆட்சியை தக்க வைத்து கொண்டது. இருப்பினும் இந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக கூறி ராணுவம் ஆட்சியைக் தன் வசம் கொண்டு வந்தது. மேலும் இராணுவத்தினர் வீட்டு சிறையில் சூகீ உள்ளிட்ட தலைவர்களை அடைத்து வைத்துள்ளனர்.
இதனை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மீதும் ராணுவம் வன்மமாக நடந்துள்ளது. இந்த நிலையில் டோன் டாவ் என்ற கிராமத்திற்குள் திடீரென புகுந்த ராணுவத்தினர் 11 பேரை கைது செய்து கால் மற்றும் கைகளை கட்டி அவர்களை தீ வைத்து கொளுத்தியுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் அந்த கிராமத்தில் வாழும் மக்களை அங்கிருந்து வெளியேறாதபடி சுற்றிலும் முற்றுகையிட்டிருந்தனர். இந்த கொடூர சம்பவம் இணையத்தில் வெளியாகி உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் டோன் டாவ் வழியாக சென்ற ராணுவ வாகனங்கள் மீது சில தினங்களுக்கு முன்பு குண்டுவீச்சு நடத்தப்பட்டது. அதற்கு பழிவாங்குவதற்காக தான் ராணுவத்தினர் 11 பேரை உயிருடன் எரித்து கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றிய ராணுவத்தினர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. அதேபோல் மியான்மரின் நடந்த இந்த கொடூர சம்பவத்தால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, மியான்மர் ராணுவம் மீது கடுமையாக சாடியுள்ளது.