Categories
உலக செய்திகள்

ராக்கெட் வேகத்தில் கொரோனா… வீரர்களே இந்த 2 நாட்டுக்கு போகாதீங்க… அமெரிக்கா அதிரடி உத்தரவு!

கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக இருப்பதால் தங்கள் இராணுவத்தினர் இத்தாலி மற்றும் தென் கொரியாவுக்கு செல்லவேண்டாம் என்று அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 

சீனாவில் தொடங்கி 97 நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் மொத்தமாக  3, 827 பேர் இறந்துள்ளனர். மேலும் 1,09,976 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6, 129 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்து, இத்தாலி, ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருகின்றது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் அமெரிக்காவிலும் பெரும்பாலான மாகாணங்களில்  வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டின் கடற்கரை மாகாணமான ஒரேகான் ( Oregon) உட்பட  8 மாநிலங்களில் சுகாதார அவசர நிலையை அந்தந்த மாநில ஆளுநர்கள் பிறப்பித்துள்ளனர்.  அண்டாரியோ (Ontario) மற்றும் ஆல்பர்ட்டா (Alberta) பகுதிகளில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கனெக்டிகட் (Connecticut) மற்றும் மெம்பஸ் (Memphis) பகுதியில் புதிதாக நோயின் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக இருப்பதால் தங்கள் நாட்டு இராணுவத்தினரும், அவர்களது குடும்பமும் இத்தாலி மற்றும் தென் கொரியாவுக்கு செல்லவேண்டாம் என்று அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் கொரோனா வைரசால் 22 பேர் உயிரிழந்த நிலையில், 538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல ஜெர்மனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் கொரோனா பாதிப்பால் எகிப்து நாட்டில் உயிரிழந்துள்ளார். இங்கிலாந்தில் தற்போது மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது. இந்த நோயின் கடுமையான தாக்கம் எதிரொலியாக பின்லாந்து, நார்வே உடனான இராணுவ ஒத்திகையை ரத்து செய்துள்ளது.

மேலும் வாடிகன், அதன் அருங்காட்சியகத்தை மூடியுள்ளது. இதேபோல், போலந்து, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் வைரஸின் தாக்கம் வேகமாக உயர்ந்து வருவது அந்நாட்டு அரசுகளையும் மக்களையும் கவலையடையச் செய்துள்ளது.

 

Categories

Tech |