கொரோனா வைரஸினால் பலியானவர்களின் உண்மையான விபரங்களை ஈரான் மறைப்பதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது ஈரானில் 95 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக, ஈரான் நாட்டில் பாதிக்கப்பட்டோர் என அந்நாட்டு அரசாங்கத்தினால் அதிகார்வபூர்வமாக அறிவிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட, உண்மையாக அந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று பிரபல செய்தி தொலைக்காட்சியான பி.பி.சி. தெரிவித்துள்ளது.
ஈரானின் துணை சுகாதார அமைச்சர் ஈராஜ் ஹரிர்ச்சி (Iraj Harirchi) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் என இருவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. சமீபத்தில் இவர் ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது இருமிக்கொண்டே இருந்துள்ளார். மேலும் வியர்வையில் நனைந்தபடியே இருந்த அவரை, மருத்துவக்குழுவினர் பரிசோதித்தபோது தான் , கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், சீனாவை தாண்டி வெளியே கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவியுள்ள பிரதான 3 இடங்களில் ஒன்றாக ஈரான் தற்போது மாறியுள்ளது. அதேநேரத்தில் கொரோனா வைரஸினால் ஏற்பட்ட உண்மையான பாதிப்பு விபரங்களை ஈரான் மறைப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.