மற்ற நாடுகளின் மீது ஆதிக்கத்தை செலுத்தும் நாடுகளுக்கு அமெரிக்கா துணை நிற்காது என வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்துள்ளார்.
தென்சீனக் கடற்பகுதியில் சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்து அங்கு போர் பயிற்சியை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்களும் அதே பகுதிக்கு அனுப்பப்பட்டது உலக நாடுகளுக்கிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியான மார்க் மீடோஸ் என்பவர் பாக்ஸ் நியூஸ் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.
அதில், “ஐரோப்பிய பிராந்தியத்திலும் சரி ஆசியாவிலும் சரி ஒரு நாடு தங்களை வலிமை மிக்கவராக வெளிக்காட்ட மற்ற நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தினால் அது சீனா உட்பட எந்த நாடாக இருந்தாலும் நாங்கள் அதற்குத் என்றும் துணையாக நிற்க மாட்டோம். எங்களின் நட்பு நாடுகளுக்கு வலுவான துணையாக நிற்போம். சமீபத்தில் இந்தியாவில் நடந்த சீன வீரர்களின் தாக்குதலுக்கு பதிலடியாக அந்நாட்டின் செயலிகளை இந்தியா தடை செய்தது செய்ததில் தவறு ஒன்றுமில்லை.
எங்கள் நாட்டின் 2 விமானம் தாங்கி கப்பல்களான நிமிட்ஸ் மற்றும் ரொனால்ட் ரீகன் ஆகியவற்றை தென்சீனக் கடற்பகுதிக்கு அனுப்பியுள்ளோம். அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காகவும் மிகப்பெரிய ராணுவ படையும் வலிமையான சக்தியும் எங்களிடம் இருப்பதை உலக நாடுகளுக்கு காட்டுவதற்காகவே நாங்கள் எங்கள் கப்பல்களை அப்பகுதிக்கு அனுப்பியுள்ளோம்.
ராணுவம் வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காக ஆயுதங்களை சேர்த்ததோடு ஆண்கள் பெண்கள் என பலரை ராணுவத்தில் சேர்த்ததில் அதிபர் டிரம்பின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது” என தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிக்கை அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் தென்சீன கடற்பகுதிக்கு அனுப்பப்பட்ட பிறகு வெளியானது குறிப்பிடத்தக்கது.