சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடி, அமெரிக்க படைக்கு ஆதரவாக நின்ற குர்து படைகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இதுவரை 637 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த போரை நிறுத்த அமெரிக்கா தொடர்ந்து முயற்சித்துவந்த நிலையில், அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரெய்ன் உள்ளிட்ட குழு ஒன்று துருக்கி அதிபர் ரெசப் தய்யிப் எர்டோகனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து தற்போது இடைக்கால போர் நிறுத்த அறிவிப்பை துருக்கி வெளியிட்டிருக்கிறது.
மேலும், தாக்குதலில் சிக்கிவரும் குர்து படைகள் போரில் இருந்து பின்வாங்கி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல 120 மணி நேர கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நிரந்தர போர் நிறுத்தத்தை செய்துகொள்ளவும் துருக்கி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அமெரிக்க உயர்மட்டக்குழு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது.
பேச்சுவார்த்தை சுமுகமடையும் பட்சத்தில் சிரியாவின் எல்லைப்பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதோடு, குர்து இனத்தவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும், குர்து இனத்தவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு, துருக்கி மீது விதிக்கபட்டுள்ள பொருளாதாரத் தடைகளை திரும்பப்பெறவும் அமெரிக்கா தயாராக உள்ளது என்றும் அமெரிக்க துணை அதிபர் பென்ஸ் தெரிவித்துள்ளார்.