சில மாதங்களுக்கு முன் மும்பையில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை சிலர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தனர். இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்தது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் வாரணாசியிலுள்ள மூத்த கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அங்கு அவருக்கு முறையான பதில் கிடைக்காததையடுத்து, அப்பெண், அவரது குடும்பத்தினர் திடீரென்று கண்காணிப்பாளர் அலுவலகத்தின் முன்பு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றனர். உடனடியாக அவர்கள் அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் இன்னும் அபாயகட்டத்தை தாண்டவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் துறை மூத்த கண்காணிப்பாளர் பிரபாகர் சவுத்திரி, “அப்பெண்ணின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவுசெய்யப்பட்ட வழக்கின் பிரிவுகள் குறைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஆனால் அது உண்மை அல்ல. சொல்லப்போனால், தொடக்கத்தில் 363, 366 பிரிவுகளின் கீழ் மட்டும் பதியப்பட்ட புகார், இப்போது 376 டி (கூட்டு பாலியல் வன்புணர்வு) கீழும் பதியப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, விசாரணையில் இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எங்களது தற்போதைய நோக்கம் பாதிக்கப்பட்ட அப்பெண்ணுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்பதுதான். அவர்கள் ஏன் இதுபோன்ற ஒரு முடிவை எடுத்தார்கள் என்று விசாரித்துவருகிறோம். சிலரின் தூண்டுதலாலேயே இந்த முடிவை அவர்கள் எடுத்ததாகத் தெரிகிறது” என்றார்