உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்திலுள்ள உட்வத் நகர் கிராமத்தில் சரியாக சாலை போக்குவரத்து வசதி இல்லாததால் மக்கள் தவித்து வந்துள்ளனர்.. இந்தநிலையில்,கிராமத்துக்கு விடுமுறையில் வந்த ராணுவ வீரர் கோவிந்த் தார் துபே என்பவர் சாலை வசதி இல்லாததால் தண்ணீர் நிரம்பிய வயல்கள் வழியாக நடந்து சென்றுள்ளார்.
அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கிராமத்து இளைஞர்கள் அவரை கட்டிலில் படுக்க வைத்தப்படியே நீர் நிரம்பியிருக்கும் வயல்கள் வழியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் முதியவரை தூக்கி சென்ற இளைஞர்கள், மறுபடியும் சிகிச்சை முடிந்தபின்னர் அதே கட்டிலில் வைத்தப்படியே தூக்கி வந்துள்ளனர். இதைத் தன்னுடைய மொபைல் போனில் வீடியோ எடுத்த கோவிந்த, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், “எனது வீட்டிலிருந்து 2 கி.மீ வரை சாலை வசதியே கிடையாது. குறிப்பாக மழை பெய்யும் காலங்களில் பிரதான சாலைக்கு செல்லும் பாதைகள் அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கிவிடும். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிடுவதன் மூலம், நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்ப்பார்க்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.