கடலூர் அருகே வெளி மாவட்டத்தில் இருந்து வேன் பிடித்து வந்த 20க்கும் மேற்பட்டோரை கிராம மக்கள் ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியை அடுத்த காராமணிகுப்பம் கிராமத்தை சேர்ந்த 5 பெண்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் என்னும் பகுதிக்கு கரும்பு வெட்டும் வேலைக்கு சென்றனர். பின் பணி முடிந்ததும், அங்கிருந்து அரசின் அனுமதியைப் பெற்று இ பாஸ் மூலம் மீண்டும் காராமணிகுப்பத்திற்கு வேன் ஒன்றை பிடித்துக் கொண்டு வந்துள்ளனர். இது குறித்து அறிந்த காராமணிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம மக்கள் வேனை முற்றுகையிட்டு அவர்களை ஊருக்குள் வர விடாமல் தடுத்தனர்.
பின் அவர்கள் நாங்கள் அரசின் அனுமதியைப் பெற்று தான் வந்துள்ளோம் என்று கடிதத்தைக் காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட, அதனை ஏற்றுக்கொள்ளாத கிராம மக்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு முடிவு வெளியான பின் நீங்கள் ஊருக்குள் வரலாம் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். பின் இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்காக கடலூர் அழைத்துச் செல்லப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.