பயன்படுத்தி குப்பையில் வீசப்படும் முகக் கவசங்களினால் கொரோனா தொற்று பரவும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்
கொரோனா தொற்றிலிருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்ள முக கவசத்தை பயன்படுத்த சொல்லி உலக சுகாதார அமைப்பகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் பயன்படுத்தி குப்பையில் போடப்படும் முகக் கவசங்களினால் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பயன்படுத்தப்பட்ட முக கவசங்களை மக்கள் குப்பையிலோ அல்லது சாலையிலேயே அப்படியே தூக்கி போட்டு விடுகிறார்கள் என தூய்மைப் பணியாளர்கள் குற்றம்சாட்டியதாக அரசு ஊடகம் ஒன்று தெரிவித்திருந்தது.
இவ்வாறு எறியப்படும் முக கவசம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கொரோனா பரவுவதற்கு இது காரணமாக அமையும் எனவும் அவசர எச்சரிக்கையை நிபுணர்கள் முன் வைத்துள்ளனர். மேலும் தெருவில் வீசப்படும் முக கவசத்தில் கொரோனா தொற்று இருந்தால் அது பத்து பேருக்கு பரவும் அபாயத்தை உருவாக்கும். இதன் மூலம் ஒருவருக்கு இருக்கும் கொரோனா தொற்று மூலம் 416 பேர் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
இவ்வாறு நோயாளிகள் வீசிய முக கவசத்தால் மற்றவர்களுக்கு பரவுமானால் ஒவ்வொருநாளும் வீசப்படும் முக கவசத்தினால் எத்தனை பேர் பாதிக்கப்படுவார்கள் என்று கணக்கிட்டால் அது விபரீதமாகவே இருக்கும். கொரோனா இல்லாத ஒருவர் முக கவசம் அணிந்து அவர் அதனை தூக்கிப் போட்டு இருந்தாலும் அவருடன் பேசிக் கொண்டிருந்தவர்க்கு கொரோனா இருந்திருந்தால் அவர் பேசும்பொழுது தும்மினாலோ இருமினாலோ அந்த நீர் முக கவசத்தில் தொற்றிக் கொண்டிருக்கலாம்.
எனவே கொரோனா தொற்று இல்லாதவர்களும் முக கவசத்தை தூக்கி எறிவதும் கொரோனா தொற்று பரவும் அபாயத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் பாதிக்கப்படாதவர்களாக இருந்தாலும் முக கவசத்தை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டியது அவசியம். நமக்காக தூய்மைப் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட நாமே காரணமாக இருந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.