மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் முக்கொம்பை வந்தடைந்துள்ளது.
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து 8 கண் மதகு வழியாக முதற்கட்டமாக 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 90 நாட்கள் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரானது இன்று திருச்சி மாவட்டம் முக்கொம்பை வந்தடைந்துள்ளது.
தண்ணீருக்கு பூத்தூவி விவசாயிகள் வரவேற்றனர். ஜூன் 16ம் தேதி பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் அறிவித்துள்ள நிலையில் மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டாலும், மாயனூர் தடுப்பணைக்கு விநாடிக்கு 5,000 கனஅடி வீதமே தண்ணீர் வந்து சேருகிறது.
இதனால் மாயனூர் தடுப்பணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் முக்கொம்பில் தேக்கி வைக்கப்படாமல் கல்லணைக்கு அப்படியே திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேட்டுர் அணையின் நீர்மட்டம் 100.18 அடியாகவும், நீர் இருப்பு 65.07 டிஎம்சியாகவும் உள்ளது. நீர்வரத்து – 2,002 கனஅடியாகவும் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 10,000 கன அடியாக உள்ளது.