மேற்கு வங்க மாநில அரசு இங்கிலாந்தில் இருந்து வரும் நேரடி விமான சேவைக்கு முற்றிலுமாக தடை விதித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை அன்று மேற்கு வங்க மாநில அரசு ‘ஒமிக்ரான்’ பரவல் அதிகரித்துக் கொண்டே வருவதால் இங்கிலாந்து உள்ளிட்ட அதிக ஆபத்து நிறைந்த நாடுகளில் இருந்து வரும் நேரடி விமான சேவையை முற்றிலுமாக ரத்து செய்வதாக அறிவித்திருந்தது. மேலும் மாநில உள்துறை செயலாளர் பி.பி.கோபாலிகா மாநில அரசு எடுத்த இந்த முடிவை கடிதம் மூலம் மத்திய விமான போக்குவரத்துத் துறை செயலாளர் ராஜீவ் பன்சலுக்கு தெரிவித்துள்ளார்.
அந்த கடிதத்தில் ‘ஒமிக்ரான்’ பாதிப்பு எண்ணிக்கை மேற்கு வங்க மாநிலத்தில் 11-ஆக உயர்ந்துள்ளது. எனவே உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து கொண்டே வருவதால் இங்கிலாந்திலிருந்து கொல்கத்தாவிற்கு நேரடியாக இயக்கப்படும் விமானங்கள் அனைத்தும் ஜனவரி 3-ஆம் தேதி முதல் தற்காலிகமாக ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அதிக ஆபத்து நிறைந்த நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கு மேற்கு வங்க மாநிலத்தில் அனுமதி கிடையாது. அதோடு மட்டுமில்லாமல் விமான சேவை தொடர்பில் ஏற்கனவே அளிக்கப்பட்டிருக்கும் தடையில்லா சான்று தற்போது ரத்து செய்யப்படுவதாக கோபாலிகா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.