பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டத்தில் பக்சிவாலா என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஜஸ்வீர் கவுர் என்ற பெண்மணி வசித்து வருகிறார். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக தன்னுடைய கணவர் காலா சிங்கை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் கவுர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனால் காவல்துறையினர் கவுரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது கவுர் தன்னுடைய கணவரை கொன்று வீட்டில் கழிவறைக்காக தோண்டப்பட்ட 25 முதல் 30 அடி ஆழ பள்ளத்திற்குள் புதைத்துள்ளார். இந்நிலையில் அவர் கொடுத்த தகவலின் பேரில் காவல்துறையினர் கழிவறைக்காக தோண்டப்பட்ட குழியில் இருந்து காலா சிங்கின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து காலா சங்கின் குடும்பத்தினர் குற்றவாளி கவுருக்கு தக்க தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கொலைக்கான உண்மையான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் போலீஸ் உயர் அதிகாரி மெஹர் சிங் கூறியுள்ளார்.