ஈரோடு அருகே சிலிண்டர் வெடித்த விபத்தில் மனைவி உயிரிழக்க கணவன் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கங்காபுரம் பகுதியை அடுத்த கொளத்தூர் பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி நந்தினி. இவர்கள் இருவருக்கும் வினித், விக்னேஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். நேற்றையதினம் ரமேஷ் மற்றும் வினித்க்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கடைக்கு சென்று வாங்கி விட்டு பின் டீ போடுவதற்காக சமயலறைக்குள் சென்றுள்ளார்.
அப்போது அவருக்கு கேஸ் கசிந்தது தெரியவில்லை. தீ பற்ற வைத்ததும் குபீரென பரவி அவரது ஆடையில் பட்டு எரியத் தொடங்கிய சில மணி நேரங்களில் சிலிண்டரும், பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி குடிசையிலும் தீப்பற்றி வீடு முழுவதும் தீ பரவியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் ரமேஷ் தனது மகனை வெளியில் தள்ளிவிட்டு மனைவியை காப்பாற்ற உள்ளே சென்றார்.
ஆனால் அவருக்கும் பயங்கர தீ காயம் ஏற்பட்டது. இதில் அவரது மனைவி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தார். கணவர் ரமேஷ் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.