வீட்டில் சடலமாக கிடந்த பெண் கொரோனாவால் இறந்திருக்கலாம் என்ற அச்சத்தில் அவரை அடக்கம் செய்வதற்கு அக்கபக்கத்தினர் உட்பட அலுவலர்களும் தயங்கிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையின் பின்புறம் வசித்து வந்த பெண் கவிதா. சென்னையில் பணிபுரிந்து வந்த இவர் கடந்த மார்ச் மாதம் தான் கிருஷ்ணகிரி வந்துள்ளார். திருமணம் முடிந்து விவாகரத்தான இவர் கூலி அடிப்படையில் மாத்தூர் பகுதியில் இருக்கும் சில மருத்துவமனைகளில் வேலை செய்து வந்துள்ளார். சில வாரங்களாக அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்தப்பெண்ணின் வீடு கடந்த இரண்டு தினங்களாக பூட்டப்பட்டு அவர் வெளியில் வராமல் இருந்துள்ளார்.
இதனால் அக்கம் பக்கம் இருந்தவர்கள் சந்தேகமடைந்து மருத்துவ அலுவலர்களுக்கு காய்ச்சலுடன் பூட்டிய வீட்டுக்குள் பெண் ஒருவர் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் மருத்துவ அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் உடன் வந்தபோது அந்தப் பெண் இறந்து விட்டது தெரிய வந்துள்ளது. சுகாதாரத்துறையினர் அவர் கொரோனா தொற்றினால் மரணம் அடைந்தாரா என்பதை அறிந்துகொள்ள சளி, ரத்த மாதிரிகளை சேகரித்து கொண்டனர். ஆனால் தொற்றினால் தான் அவர் இறந்திருக்க கூடும் என உறுதியாக நினைத்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் அடக்கம் செய்வதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக சுகாதார மற்றும் வருவாய்த் துறையினரும் கொரோனா அச்சத்தால் உடலை அடக்கம் செய்வதற்கு மறுத்ததாக தெரியவந்துள்ளது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட காலையிலிருந்து மாலை வரை சடலம் இருந்த இடத்திலேயே இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த மனிதநேய மக்கள் கட்சியினர் 15 பேர் தற்காப்பு உடைகளுடன் அந்த பெண்ணை அடக்கம் செய்தனர்.