Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“தர்ணாவில் ஈடுபட்ட‌ பெண்” தரையில் அமர்ந்து குறை கேட்ட கலெக்டர்…. அடுத்த நொடியே கைது…. வேலூரில் பரபரப்பு….!!!!!

வேலூர் மாவட்டத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மனுக்களை பெற்றுக்கொண்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதன் பிறகு குறைதீர்க்கும் கூட்டத்தில் மலைகன்னிகாபுரம் பகுதியில் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மகள் விஜயலட்சுமி என்பவர் மனு கொடுப்பதற்காக வந்திருந்தார். இந்தப் பெண் திடீரென கூட்டம் முடிவடைந்த பிறகு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார்.

அந்த பெண்ணிடம் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தினார். அப்போது தன்னுடைய தந்தை பெயரில் இருக்கும் வீட்டுமனையை குறைவாக காண்பித்து பட்டா வழங்கியுள்ளனர் எனவும், இது குறித்து பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறினார். உடனே மாவட்ட ஆட்சியர் மீண்டும் புதிதாக ஒரு மனு கொடுங்கள் உங்களுடைய கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்றார். இதனை ஏற்க மறுத்த விஜயலட்சுமி மீண்டும் புதிய மனுவை கொடுக்க முடியாது எனவும், வீட்டுமனை பட்டாவை திருத்தம் செய்து தந்தால் தான் போராட்டத்தை கைவிடுவேன் என்றும் கூறினார்.

இதன் காரணமாக அந்த பெண்ணின் எதிரே மாவட்ட ஆட்சியரும் தரையில் அமர்ந்து கொண்டார். இதைத்தொடர்ந்து அந்தப் பெண் வைத்திருந்த பழைய மனுவை கலெக்டர் கேட்டார். அந்தப் பெண்ணும் மனுவின் நகலை கலெக்டரிடம் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதோடு தர்ணா போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து எழுந்து செல்லும்படியும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். அதற்கு மறுப்பு தெரிவித்த பெண்மணி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் மாவட்ட ஆட்சியர் அந்த பெண்ணை கைது செய்யும்படி கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். மேலும் இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |