திமுக சார்பில் நடந்த விழாவில் பேசிய திருச்சி சிவா, அறிஞர் அண்ணா எங்களுக்கு தொடக்க காலத்தில் சொல்லிக் கொடுத்தது, கலைஞரும் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அண்ணாவும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்… அண்ணா சொன்னது, தம்பி மக்களோடு சென்று அவர்களோடு சேர்ந்து வாழ வேண்டும். அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களிடம் என்ன இருக்கிறதோ, அதிலிருந்து தொடங்க வேண்டும்.
உதாரணத்திற்கு ஒரு இடத்திற்கு செல்கிறோம். அங்கே இருக்கிற மக்களுக்கு ஆரம்ப கல்வி வசதி கூட இல்லை என்றால், ஆனா, ஆவன்னாவில் இருந்து ஆரம்பிக்க வேண்டுமே, தவிர எங்களுக்கு தெரிந்த ஆங்கில இலக்கியத்திலிருந்து ஆரம்பிக்கக் கூடாது.மக்களுக்கு தகுந்த அளவிற்கு நம்முடைய பணிகளின் ஆரம்பம் இருக்க வேண்டும். எது இருக்கிறதோ அதை கொண்டு கட்டமைக்க வேண்டும் என்று அண்ணா சொன்னது போல்…
கலைஞர் அவர்கள் 21 வயதில் நான் கல்லூரி மாணவனாக மிசா சிறைவாசத்தை அனுபவித்து முடிந்து திரும்பிய பொழுது, எனக்கு கொடுத்த அறிவுரைகளில் ஒன்று…. உன்னை போன்றவர்கள் வெளியிலே செல்லுகின்ற போது நடை, உடை, தோற்றம் இவைகள் பார்க்கிற மக்களுக்கு இவன் நம்மில் ஒருவன் என்று தோன்ற வேண்டுமே, தவிர கழுத்திலும், காதிலும், கையிலும் பார்க்கிறவர்களுக்கு ஏதாவது எண்ணம் ஏற்படக்கூடிய அளவிற்கு இவர் யாரோ, ஒருவர் என்று எண்ணக்கூடிய தோற்றம் இருக்கக் கூடாது என்று சொன்னார்.
அப்பொழுது நான் ஒரு மாணவனை போல உடை உடுத்திக் கொண்டிருப்பேன். அன்று மாறியது தான் இந்த உடை. இன்றல்ல… டெல்லிக்கு மட்டுமல்ல, ஆஸ்திரேலியாவிற்கு சென்றாலும், சீனாவிற்கு சென்றாலும், இதுதான் என்னுடைய உடை. அவர்கள் இதை பாராட்டுகிறார்கள். இங்கிருந்து வெளிநாடு போகிற பொழுது கோட்டு சூட்டோடு போக வேண்டும் என்பது இல்லை, பரவசத்தோடு இது உங்கள் பாரம்பரிய உடையா ? ஆம் நான் தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன். அதன் அடையாளம் தான் நான் கட்டியிருக்கிற வேட்டி. நாங்கள் தமிழ் உணர்வு உள்ளவர்கள், தமிழ் மொழி எங்கள் தாய்மொழி என்ற பெருமிதத்தோடு அவர்களிடம் சொல்லுவோம் என தெரிவித்தார்.