கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் ‘கோவிட்-19’ என்று அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்க முடியாமல் சீனா, அமெரிக்கா உட்பட உலகநாடுகள் திணறி வருகின்றன. இதுவரையில் கொரோனா வைரசுக்கு 2,300-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 76,000-த்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில், உலக சுகாதார அமைப்பும்ம் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.இந்தநிலையில் கொரோனா வைரசின் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கின்றன என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும் சீனாவை விட்டு வெளியே கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது சிறிய அளவிலானதாக காணப்பட்டாலும், இது பரவும் விதம் மிகவும் கவலையளிக்கிறது. பயணங்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு போன்ற தெளிவான நோய் தொற்று தொடர்பே இல்லாதவர்கள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.