உலகின் மிகப்பெரிய ஜெயன்ட் புத்தர் சிலையின் பாதங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
சீனாவின் தென்மேற்கு பகுதியில் பாயும் யாங்சே ஆற்றில் வரலாறு காணாத அளவிற்கு தற்போது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் உலகிலேயே மிகப்பெரியதான ஜெயண்ட் புத்தர் சிலையின் பாதங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. 233 அடி உயரத்தில் மலையைக் குடைந்து 1200 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த புத்தர் சிலையை பாதுகாக்க அதிகாரிகளும், தன்னார்வலர்களும் மணல் மூட்டைகளை கொண்டு வெள்ள நீரை தடுத்து வருகின்றனர்.
யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாகவும் இச்சிலை திகழ்கிறது. 1949 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல்முறையாக வெள்ள நீர் புத்தரின் பாதங்களை மூழ்கடித்து செல்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சீனாவில் இந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளனர்.