உத்தரப் பிரதேச மாநில மின்சார கழக ஊழியர்களின் (Uttar Pradesh Power Corporation Limited (UPPCL)) வருங்கால வைப்புத்தொகை ரூ.2,631.20 கோடி, தனியார் நிறுவனமான திவான் வீட்டுவசதி நிதி நிறுவனத்தில் (Dewan Housing Finance Ltd (DHFL)) முதலீடு செய்யப்பட்டுள்ளது.இது யோகி ஆதித்யநாத் அரசு மீது விமர்சனம் எழக் காரணமாயிற்று. இது தொடர்பாக அம்மாநில மின்சாரத் துறை அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா (Srikant Sharma) லக்னோவில் ( Lucknow) செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:கண்ணாடி மாளிகையில் இருந்தபடி அவர்கள் (சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர்) கல்லெறிகின்றனர். 2014 ஏப்ரல் 21ஆம் தேதி அகிலேஷ் யாதவ் தலைமையிலான (Akhilesh Yadav) சமாஜ்வாதி அரசு அரியணையிலிருந்தபோது இந்த முடிவு எடுக்கப்பட்டது.அதன்படி 2017ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதியிலிருந்து டி.ஹெச்.எஃப்.எல். தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுவருகிறது.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி (Priyanka Gandhi), அடிப்படை தெரியாமல் பேசிவருகிறார். அவரது அரசியல், ட்விட்டருக்கு மட்டுமே பொருந்தும். அவர் முதலில், தனது கணவர் ராபர்ட் வதோரா மீதான ஊழல் குற்றஞ்சாட்டுகள் குறித்து பேச வேண்டும். இந்த அரசு ‘அப்பழுக்கற்ற ஒரு சன்னியாசி’யால் நடத்தப்படுகிறது.இது தொடர்பான புகார்கள் ஜூலை 10ஆம் தேதி எழுந்தது. அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் முன்னாள் செயலர் பி.கே. குப்தா (PK Gupta) பணிநீக்கம் செய்யப்பட்டார்.
விசாரணை அறிக்கையின் அடிப்படையில் உத்தரப் பிரதேச மின்சார கழக இயக்குநர் (நிதி) சுதான்ஷு திவேதி (Sudhanshu Dwivedi), பி.கே. குப்தா (PK Gupta) ஆகியோர் மீது லக்னோவிலுள்ள ஹஸ்ரத்கஞ்ச் (Hazratganj) காவல் நிலைய அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.மேலும் இவ்விவகாரம் தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரிக்குமாறு பரிந்துரைத்துள்ளோம். தொழிலாளர்களின் பணம் திரும்பக் கிடைக்கும். தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்துக்கு ஆதரவாக அரசு துணை நிற்கும்.இவ்வாறு ஸ்ரீகாந்த் சர்மா பேசினார்.
திவான் வீட்டுவசதி நிதி நிறுவனம் வங்கிசாராத நிதி நிறுவனமாகும். இதில் அரசு தொழிலாளர் வைப்புத்தொகை முதலீடு செய்தது ஏன்? என்ற கேள்வி வலுத்துள்ளது.இது தொடர்பாக கருத்து தெரிவித்த உத்தரப் பிரதேச மின்சார அலுவலர்கள் சங்க செயல் தலைவர் அவதேஷ் வர்மா (Awadhesh Verma), “தொழிலாளர்களின் வைப்புத்தொகை உறுதியாகத் திரும்ப கிடைக்கும், இதில் அரசு உறுதியாக உள்ளது.இவ்விவகாரம் குறித்து மத்திய புலனாய்வுத் துறை (CBI) விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.