திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கடந்த 12ஆம் தேதி (ஞாயிறு) தளர்வுகள் இல்லாத பொது முடக்கத்தின்போது ஆம்பூர் ஓ.ஏ.ஆர் தியேட்டர் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.. அப்போது அந்தவழியாக மருந்து வாங்க வந்த அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த முகிலனின் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால், கடும் விரக்தியடைந்த இளைஞர் முகிலன், போலீசாரை கண்டித்து பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார்.
பின்னர், அவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.. கடந்த 8 நாள்களாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி முகிலன் இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி பிரவீன் குமார் என்பரை விசாரணை அலுவலராக நியமனம் செய்து முதற்கட்டமாக அங்கு பணியில் இருந்த போலீசார் மற்றும் ஊர் காவல் படையைச் சேர்ந்த 5 பேரை திருப்பத்தூர் நகர காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
பின்னர் இளைஞரிடம் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் சந்திரசேகர் என்பவரை கடந்த 17ஆம் தேதி விசாரணை முடியும் வரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவிட்டார்.. டி.எஸ்.பி பிரவீன் குமார் கடந்த 8 நாட்களாக சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டிவி கேமராவில் பதிவான காட்சிகளை சேகரித்து சம்பவத்தின் போது பணியிலிருந்தபோலீசார், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 3 பேர் என 5 பேரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.