கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள போடிபாளையம் பகுதியில் பாபு என்ற இளைஞர் அதே பகுதியில் வசித்துவரும் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம், காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறி, பின் யாரும் இல்லாத விநாயகர் கோயிலுக்கு அந்த சிறுமியை அழைத்துச் சென்று, ரகசியமாக தாலி கட்டிவிட்டு, அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதனைத்தொடர்ந்து அந்த சிறுமியை இளைஞர் கர்ப்பமாக்கியுள்ளார்.
நாட்கள் செல்ல செல்ல மாணவியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து சந்தேகம் அடைந்த தாயார், இது பற்றி சிறுமியிடம் கேட்டபோது, பாபு என்ற இளைஞர் தன்னை வற்புறுத்தி ரகசியத் திருமணம் செய்ததாகவும், யாரும் இல்லாத நேரத்தில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததால், தான் கர்ப்பமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், இது பற்றி பொள்ளாச்சி மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார். இந்தப் புகாரின் பேரில் சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து அவிநாசி கிளைச் சிறையிலடைத்தனர்.