9 மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டது, அதனுடைய வார்டு மறுவரையறைப் பணிகள், பிப்ரவரி இரண்டாம் வாரத்திற்குள் முடித்து அரசாணை வெளியிட வேண்டும் என்று, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
சென்னை, கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில், வார்டு மறுவரையை பணிகள் குறித்து அதிகாரிகளுடன், மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
இதில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் வார்டு மறுவரையரைப் பணிகள், பிப்ரவரி இரண்டாம் வாரத்திற்குள் முடித்து அதற்கான அரசாணை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், அதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகங்கள் துரிதமாக நடத்தி முடிக்க வேண்டும் எனவும், அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையர் அறிவுறுத்தினார். பிப்ரவரி முதல் வாரத்தில், வரைவு வார்டு மறுவரையரை பட்டியலை தயார் செய்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களை பெற வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.
புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களுக்கான தேர்தலை 3 மாதத்தில் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கான பணிகளை முடிக்க மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.