மண்ணெண்ணெய் விளக்கால் ஏற்பட்ட தீ விபத்தில் கருகி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
மத்தூர் அருகே உள்ள பெருகோபனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் 80 வயதுடைய கோவிந்தம்மாள். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் கோவிந்தம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் கோவிந்தம்மாள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் வைத்திருந்த மண்ணெண்ணெய் விளக்கு தவறி மூதாட்டி மீது விழுந்ததால் அவரது உடல் தீ பிடித்துக்கொண்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த கோவிந்தம்மாள் கூச்சலிட்டுள்ளார் . அவருடைய சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர் . ஆனால் ,அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை .
பின்னர் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவலை தெரிவித்தனர். தகவலறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். பின் உள்ளே சென்று பார்த்தபோது உடல் கருகிய நிலையில் கோவிந்தம்மாள் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.