கோவையில் தீயில் கருகி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள சீலக்காம்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி சாயம்மாள்(85). சம்பவத்தன்று இவரது வீட்டில் திடீரென மின்சார நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது சாயம்மாள் மண்ணெண்ணெய் விளக்கை பற்ற வைத்துள்ளார். மண்ணெண்ணெய் விளக்கிலிருந்து வந்த தீ எதிர்பாராதவிதமாக இவரது சேலையில் தீப்பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் மளமளவென்று அவரது உடல் முழுவதும் நெருப்பு பரவியது.
இதில் வலி தாங்க முடியாமல் அவர் அலறியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று சாயம்மாளை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சாயம்மாள் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.