ஓடும் லாரியில் இருந்து பெயிண்ட் டின்களை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் லாரி டிரைவர் சங்கர்கணேஷ். இவர் கோவையில் இருந்து மதுரைக்கு லாரி மூலம் பெயிண்ட் டின்களை ஏற்றி வந்துள்ளார். இவர் திண்டுக்கல் பகுதியில் வந்து கொண்டிருக்கும்போது ஆம்னி வேனில் வந்த சில நபர்கள் லாரியை பின் தொடர்ந்துள்ளனர். பின்னர் ஆம்னி வேனில் இருந்து லாரியில் குதித்து லாரியில் இருக்கும் பெயிண்ட் டின்களை ஆம்னி வேனில் ஏற்ற தொடங்கியுள்ளனர். இதனை கண்ட சங்கர்கணேஷ் சினிமாவில் நடப்பது போல் இருப்பதால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் சங்கர் கணேஷ் அதனை கண்டுகொள்ளாமல் இருப்பதுபோல் லாரியை சிறிது தூரம் ஓடிச் சென்று உள்ளார். பின்னர் அந்த பகுதியில் போர்வெல் போடும் பணியாளர்கள் கூட்டமாக நின்றுள்ளனர். அதனை கண்ட சங்கர்கணேஷ் லாரியை அந்த பக்கமாக நிறுத்திவிட்டு அவர்களிடம் போய் நடந்ததை கூறியுள்ளார். இதனையடுத்து போர்வெல் போடும் பணியாளர்கள் தாங்கள் உதவுவதாகக் கூறி லாரியின் அருகில் வந்தபோது மர்ம நபர்கள் சுதாரித்து கொண்டு ஆம்னி வேனில் தப்பிச் சென்றுள்ளனர்.
அதன்பின் சங்கர் கணேஷ் இரவு நேரமானதால் லாரியை எடுக்காமல் அங்கேயே இரவை கழித்து விட்டு மறுநாள் காலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையே அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் மர்ம கும்பல் ஒன்று பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இந்த தகவலின் பேரில் மர்ம கும்பலை பிடிப்பதற்காக சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள தோட்டத்திற்கு விரைந்து சென்று அவர்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த விசாரணையில் அவர்கள் தான் லாரியில் இருந்து பெயிண்ட் டின்களை திருடியது என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அவர்கள் மதுரை மாவட்டத்திலுள்ள வீரமணி, நாகமலை, விஜயகுமார், பரதன், பிரபாகரன், நாகார்ஜூன், விக்னேஸ்வரன் ஆகிய 7 பேர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் வேறு ஏதேனும் கொலை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.