டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சோ. புதூரில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கல்லூரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜீவா என்ற மனைவி உள்ளார். இவர் அங்குள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இதனால் கணவன்-மனைவி இருவரும் அவலூர்பேட்டை சாலையில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் வீடு பூட்டிக் கிடந்ததை அறிந்த மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பீரோவில் இருந்த கம்மல், பிரேஸ்லெட், தங்கசங்கிலி உள்ளிட்ட 12 பவுன் நகைகளை திருடி சென்றது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது குறித்து தகவலறிந்த கார்த்திகேயன் சோ.புதூருக்கு உடனடியாக வந்து பார்த்த போது வீட்டிலிருந்த 12 பவுன் தங்க நகை திருட்டு போயிருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து கார்த்திகேயன் கீழ்பென்னாத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் நகையை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.