பூட்டியிருந்த வீட்டில் 7 பவுன் நகை திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரியதாழை கிராமத்தில் ஜோசப் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். கடந்த 4-ஆம் தேதி ஜோசப் அந்தோணி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் தேவாலயத்திற்கு சென்றுள்ளார். அதன்பிறகு ஜெபம் முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஜோசப் அந்தோணி தட்டார்மடம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.