வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அறிவொளி நகரில் சுந்தரலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவரஞ்சன் என்ற மகன் உள்ளார். இவர் வீரபாண்டி அருகில் உள்ள தனியார் பனியன் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். இதனையடுத்து இருவரும் மாலை திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்கச் சங்கிலி, வளையல், மோதிரம் உள்பட 7 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.7 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சிவரஞ்சன் பல்லடம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வீடு புகுந்து கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.