வீட்டின் பூட்டை உடைத்து 110 பவுன் தங்கம், 2 கிலோ வெள்ளி மற்றும் 50 ஆயிரம் ரூபாய் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கன்னிவாக்கம் கிராமத்தில் செந்தாமரை என்பவர் வசித்துவருகிறார். இவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் தனது மனைவியுடன் சென்னையில் உள்ள தனது மகளின் புதுமனை புகுவிழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த 11ஆம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இவரது மகன் நந்தகுமார் என்ற சித்த மருத்துவர் வீட்டின் மாடியில் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியை அழைத்து வருவதற்காக மாடியில் உள்ள வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதன் பின் ஊருக்கு சென்ற செந்தாமரை திரும்ப வந்து பார்த்தபோது, வீட்டில் பூட்டு உடைந்த நிலையில் இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.
மேலும் மேல் மாடியில் உள்ள வீட்டிற்கு சென்று பார்த்தபோது அந்த வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 கிலோ வெள்ளி பொருள், 100 பவுன் தங்க நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் போன்றவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தந்தை, மகன் இருவரும் கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.