வீட்டின் பூட்டை உடைத்து ஒரு கிலோ வெள்ளி, 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 3 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா நகர் மனோன்மணி தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் அரிசி மண்டி நடத்தி வந்துள்ளார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூருக்கு சென்று விட்டார். இதனையடுத்து தனது வீட்டிற்கு திரும்பி வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ஆறுமுகம் அதிர்ச்சி அடைந்தார்.
அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், 2000 ரூபாய் பணம் மற்றும் 3 பவுன் தங்க நகைகளை திருடி விட்டுச் சென்றது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து செங்குன்றம் காவல் நிலையத்தில் ஆறுமுகம் புகார் அளித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்கு ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர். அதன்பின் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வீட்டில் திருடி சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.