Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அம்பாளையும் விட்டு வைக்கவில்லை… மர்ம நபர்களின் கைவரிசை… CCTV கேமராவில் பதிவான காட்சிகள்…!!

காவலாளியை தாக்கி விட்டு கோவிலில் 2 மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி புதுக்கோட்டை சாலையில் உள்ள அறிவியல் கோளரங்கம் எதிரே பிரசித்தி பெற்ற பச்சநாச்சியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலை தனியார் அமைப்பு நிர்வகித்து வருவதால் அனைத்து நாட்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். மேலும் செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் பக்தர்கள் அதிக அளவில் வந்து சாமியை தரிசித்து விட்டு செல்வார்கள். இந்த கோவிலில் திருச்சி கொட்டப்பட்டு இந்திராநகர் பகுதியில் வசித்து வரும் ராஜ ரத்தினம் என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இந்த கோவிலில் பூஜைகள் முடிந்ததும் நிர்வாகத்தினர் கோவிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். அதன் பிறகு கடுமையான பனிப்பொழிவு காரணமாக கோவில் வளாகத்திலேயே காவலாளி ரத்தினம் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, திடீரென அங்கு வந்த 2 மர்ம நபர்கள் ராஜரத்தினத்தை சரமாரி தாக்கியதில் அவர் அங்கு மயங்கி விழுந்து விட்டார். அதன்பிறகு கோவிலுக்குள் நுழைந்த அந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம், அம்மன் கழுத்தில் கிடந்த இரண்டு தங்க காசுகள் மற்றும் அந்த காவலாளி வைத்திருந்த 4500 ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

அதன் பிறகு சிறிது மயக்கம் தெளிந்தவுடன் ராஜரத்தினம் உடனடியாக நிர்வாகத்தினருக்கு இது குறித்து தகவல் தெரிவித்து விட்டார். அவர்கள் விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மோப்ப நாய் உதவியுடன் அங்கு விசாரணையில் ஈடுபட்டனர். அதோடு கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.தி.வி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விமான நிலைய போலீசார் அந்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |