குடும்பத்திலுள்ளவர்களை மிரட்டியதோடு அவர்களை ஒரு அறையில் வைத்து பூட்டி விட்டு மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள வீரகனூர் பகுதியில் தீபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சரிகா, ஜெனிகா என்ற இரு மகள்கள் உள்ளனர். இவர்களுடன் தீபனின் தாயார் கலைச்செல்வி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் இவரது வீட்டின் வெளிப்புற கதவை உடைத்து உள்ளே சென்று தூங்கிக்கொண்டிருந்த அனைவரிடமும் கத்தி மற்றும் உருட்டு கட்டைகளை காட்டி மிரட்டியுள்ளனர். அதன் பின் அவர்கள் வீட்டில் இருந்த 1 லட்சத்து 30 ஆயிரம் பணம் மற்றும் 27 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து அதன் பின் வீட்டில் இருந்த நபர்கள் அனைவரையும் ஒரு அறையில் வைத்து பூட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதனையடுத்து பக்கத்து வீட்டினரிடம் திவ்யாவிடம் இருந்த செல்போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் விரைந்து வந்து கதவை திறந்து விட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் அந்த வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த மர்ம நபர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களா அல்லது வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களா என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.