குழந்தையின் கையில் இருந்த பிரேஸ்லெட்டை மூதாட்டி திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள பெருங்குடியில் அமுதா என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல்பட்டு அருகே உள்ள மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு தனது மூன்று வயது குழந்தையுடன் சென்று விட்டு அதன் பின் அரசு பேருந்தில் தாம்பரம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது பேருந்தில் இருந்து இறங்க முயற்சிக்கும் போது, குழந்தையின் கையில் இருந்த பிரேஸ்லெட் காணாமல் போனதை கண்டார். இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த அமுதா பேருந்தில் தனக்கு அருகில் அமர்ந்திருந்த மூதாட்டி மீது சந்தேகப்பட்டு தாம்பரம் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த மூதாட்டியை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் தாம்பரம் பாரதி நகர் பகுதியில் வசித்து வரும் பெருந்தேவி என்பது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் ஓடும் பேருந்தில் அமுதாவின் கையிலிருந்த தங்க நகையை அந்த மூதாட்டி திருடியதும், அந்த மூதாட்டியின் மீது பிக்பாக்கெட் வழக்கானது பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அந்த மூதாட்டியை கைது செய்த போலீசார் அவர் திருடிய பிரேஸ்லெட்டை மீட்டு அமுதாவிடம் ஒப்படைத்து விட்டனர். அதன் பின்னர் தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மூதாட்டி சிறையில் அடைக்கப்பட்டார்.