பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள கோவிலில் ஆஞ்சநேயர் ஐம்பொன் சிலை மற்றும் தங்க, வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் திருடி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடி விருதாச்சலம் மெயின் ரோட்டில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தேவி, பூதேவி சமேத அழகிய மணவாளப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இரண்டரை அடி உயரமுள்ள ஐம்பொன்னாலான ஆஞ்சநேயர் சிலை இருக்கின்றது. இங்கு கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வந்து சாமியை தரிசித்து விட்டு செல்வார்கள். இந்நிலையில் தர்மகத்தா பாலசுப்பிரமணியன் வழக்கம்போல் கோவிலில் பூஜைகள் முடிந்த பின்னர் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனை அடுத்து மர்ம நபர்கள் கோவிலின் சுற்று சுவர் மீது ஏறி கோவிலுக்குள் குதித்து அந்த வளாகத்தின் முன் பக்க கதவை கடப்பாறையால் உடைத்து உள்ளே புகுந்து விட்டனர். அதன்பின் அந்த கோவிலில் இருந்த ஐம்பொன்னாலான ஆஞ்சநேயர் சிலையை திருடியதோடு, அம்மன் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்நிலையில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவிலின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்தவுடன் தர்மகர்த்தா பாலசுப்பிரமணியனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்பின் அங்கு விரைந்து சென்று பார்த்த பாலசுப்பிரமணியன் கோவிலில் இருந்த தங்க, வெள்ளி நகைகள் மற்றும் ஐம்பொன்னாலான ஆஞ்சநேயர் சிலை திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கோயிலை பார்வையிட்ட பின்னர், அங்கிருந்த பொதுமக்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தங்க, வெள்ளி நகைகள் மற்றும் ஐம்பொன் சிலையை திருடி சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.