பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து ஒரு பெண்ணை மிரட்டி மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள சீனிவாசன் நகர் 5 வது குறுக்குத் தெருவில் விஜயா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊறுகாய், இட்லி பொடி, கம்ப்யூட்டர் சாம்பிராணி போன்றவற்றை விற்பனை செய்து வந்துள்ளார். இவருடைய தம்பியான வைத்தியநாதன் என்பவர் இவருக்கு உதவியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அண்ணா சாலையில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் தனது வியாபாரத்திற்காக 25 ஆயிரம் ரூபாயை வாங்கிவிட்டு விஜயா ஆட்டோவில் வீட்டிற்கு வந்துள்ளார்.
இதனையடுத்து தன் தம்பிக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு தான் வளர்க்கும் நாய்க்கு சாப்பாடு கொடுப்பதற்காக வீட்டின் வெளியே வந்துள்ளார். அப்போது திடீரென அங்கு வந்த மர்ம நபர்கள் விஜயாவின் வாயை பொத்தி கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி அவரை வீட்டிற்குள் இழுத்து சென்று விட்டனர். இதனை பார்த்த அவரது தம்பி வைத்தியநாதன் சத்தம் போட முயற்சிக்கும் போது, அந்த கும்பல் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அதன்பின் அந்த மர்ம நபர்கள் விஜயா வீட்டில் வைத்திருந்த 25 ஆயிரம் ரூபாய் பணம், ஒரு செல்போன் போன்றவற்றை திருடி விட்டு அக்கா, தம்பி இருவரையும் வீட்டிற்குள் வைத்து வெளியே தாழ்ப்பாள் போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து தனது வீட்டில் உள்ள ஜன்னல் வழியே விஜயா சத்தம் போட்டார். இதனைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டனர். இச்சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசில் விஜயா புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.