விவசாயி வீட்டில் 20 பவுன் நகை மற்றும் காரை கொள்ளையடித்து சென்ற குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வள்ளிபுரத்தில் குமரவேல் என்ற விவசாயி வசித்து வருகிறார். கடந்த 12 ஆம் தேதி இவர் தனது குடும்பத்துடன் அவரது விவசாய தோட்டத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது அவரின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள் மற்றும் அவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் போன்றவை திருடப்பட்டது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து நல்லிபாளையம் காவல்நிலையத்தில் குமரவேல் புகார் அளித்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனர். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த திருட்டு சம்பவத்தில் 3 பேர் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் வசித்து வரும் கெரின் என்பவரையும், எடப்பாடியில் வசித்து வரும் சிவசக்தி என்பவரையும், சுங்கச்சாவடி அருகே திருட்டில் ஈடுபட்ட கிருஷ்ணகிரியில் வசிக்கும் ராஜ்குமார் என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்த காரையும் 11 பவுன் நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.