வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள பரங்கிமலை ஏழுகிணறு முதல் தெருவில் ஜெயந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வந்த தனது உறவினர் இறந்து விட்டதால் துக்க நிகழ்ச்சிக்கு போவதற்காக தனது வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதன் பின் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்த ஜெயந்தி பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து உடனடியாக ஜெயந்தி நந்தம் பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.